• Home
  • Sports
  • Basketball
  • எர்லிங் ஹாலண்ட்: நார்வேயின் கால்பந்து நாயகன்

நார்வேயின் ‘வைக்கிங்’ எர்லிங் ஹாலண்ட்: கால்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயம்

ALN NEWS DESK
ALN NEWS DESK
Updated : Jul 13, 2026, 09:24 PM IST
5 min read
  • linkedin
  • twitter
  • facebook
  • instagram
  • whatsapp

எர்லிங் ஹாலண்ட், நார்வேயின் புதிய நாயகன், உலகக் கோப்பையில் சாதனைகள் படைத்து, தனது நாட்டின் கால்பந்து வரலாற்றை மாற்றியுள்ளார்.

ஒரு கோல் என்பது போட்டியின் முடிவையே மாற்றலாம். ஒரு வீரர் என்பவர் ஒரு தலைமுறையின் கனவை மாற்றலாம். ஆனால், ஒரு முழு நாட்டின் கால்பந்து வரலாற்றையே மாற்றும் வீரர்கள் மிக அரிது. அந்த அரிய வரிசையில் இன்று உலகக் கால்பந்து உரக்க உச்சரிக்கும் பெயர்தான் எர்லிங் ஹாலண்ட்.

1998-க்குப் பிறகு உலகக் கோப்பை மேடையை எட்ட முடியாமல் தவித்த நார்வே, 2026-ல் மீண்டும் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நின்றதற்கு பின்னால் இருந்த மிகப் பெரிய காரணம் ஹாலண்ட் தான். ஒரு வீரரின் கோல்கள் மட்டும் அந்த மாற்றத்தை உருவாக்கவில்லை; அவர் உருவாக்கிய நம்பிக்கையும் அதற்குக் காரணமாக அமைந்தது.

அபாரமான வேகம், அசைக்க முடியாத உடல் வலிமை, கோல் முன் நொடிப்பொழுது முடிவுகள், வெற்றிக்கான தீராத பசி என அனைத்தையும் ஒன்றாகக் கொண்டவர், நவீன கால்பந்தின் மிக முழுமையான ஸ்ட்ரைக்கர்களில் ஒருவராக ஹாலண்ட் தன்னை நிலைநிறுத்தி உள்ளார்.

லீட்ஸ் நகரில் பிறந்த கனவு

2000-ஆம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் தொழில்முறை கால்பந்து வீரரான அல்ஃபி ஹாலண்ட்கும், முன்னாள் ஹெப்டாத்லான் வீராங்கனையான கிரி மாரிட்டாக்கும் மகனாக பிறந்தார் எர்லிங் பிரவுட் ஹாலண்ட். கால்பந்து மட்டுமில்லாமல், ஸ்கீயிங், தடகளம், ஹேண்ட்பால் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்பது அவரது பெற்றோரின் விருப்பமாக இருந்தது. அந்தப் பல்துறை பயிற்சிகள்தான் பின்னாளில் ஹாலண்டின் உடல் திறன், சமநிலை வேகம் ஆகியவற்றுக்கும் அடித்தளமாக அமைந்தது.

சிறுவயதிலேயே அவரது உடல் திறன் கவனத்தை ஈர்த்தது. ஐந்து வயதில் நிகழ்த்திய ஸ்டாண்டிங் லாங் ஜம்ப் (Standing Long Jump) சாதனை இன்றுவரை பேசப்படுகிறது. ஆனால், அந்தக் குழந்தை ஒருநாள் உலகக் கால்பந்தின் முகமாக மாறுவான் என்று அப்போது யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

13 வயதில் கண்டறியப்பட்ட திறமை

நார்வேயின் பிரைன் (Bryne) கிளப்பில் தொடங்கிய பயணம், மிக விரைவாக பயிற்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அப்போது அவரைப் பயிற்றுவித்த அல்ஃப் இங்வே பெர்ன்ட்சென், “13 வயதில் அவர் ஓடிய விதமும், இன்று ஓடும் விதமும் ஒன்றுதான். கோலைத் தேடும் அந்த உள்ளுணர்வு அப்போதே இருந்தது” என்று கூறியிருந்தார்.

2017-ல் மோல்டே (Molde) அணிக்காக அறிமுகமான ஹாலண்ட், அங்கு முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திரம் ஓலே குன்னார் சோல்ஸ்க்யேரின் கீழ் பயிற்சிபெற்றார். 2019-ல் ஆஸ்திரியாவின் ஆர்பி ஸால்ஸ்பர்க் (RB Salzburg) அணிக்காக விளையாடியபோது, அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது.

யுஇஎஃப்ஏ (UEFA) சாம்பியன்ஸ் லீக் அறிமுகப் போட்டியிலேயே ஹாட்ரிக் அடித்து உலகக் கால்பந்தின் கவனத்தை தனது பக்கம் திருப்பினார். அதே ஆண்டில் ஃபிபா யு-20 உலகக் கோப்பையில் ஹோண்டுராஸ்க்கு எதிராக ஒரே போட்டியில் 9 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்தார். 2019-ம் ஆண்டு, உலகக் கால்பந்தின் அடுத்த சூப்பர் ஸ்ட்ரைக்கர் பிறந்துவிட்டார் என்பதை உலகமே உணர்ந்த ஆண்டாக மாற்றினார்.

டார்ட்முண்ட்டிலிருந்து மான்செஸ்டர் வரை...

2020-ல் போருசியா டார்ட்முண்ட்டில் இணைந்த ஹாலண்ட், ஜெர்மன் கால்பந்தின் அடுத்த பெரிய நட்சத்திரமாக உருவெடுத்தார். கோல் அடிக்கும் திறன் மட்டுமல்லாமல், எதிரணி பாதுகாப்பை மனதளவில் சிதைக்கும் அவரது இருப்பும் கவனிக்கப்பட்டது.

2022-ல் மான்செஸ்டர் சிட்டியில் இணைந்தபோது, பல கேள்விகள் எழுந்தன. பெப் குவார்டியோலாவின் பாஸிங் கால்பந்தில் இவர் பொருந்துவாரா? பந்தையே அதிகம் தொடாத ஒரு ஸ்ட்ரைக்கரால் சிட்டியின் ஆட்டம் பாதிக்கப்படுமா என்பன போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்தன. ஆனால், விமர்சனங்களுக்கான பதிலை வார்த்தைகளுக்கு மாறாக கோல்களில் கூறினார்.

2022-23-ம் ஆண்டின் பிரீமியர் லீக் வரலாற்றில் 38 போட்டிகள் கொண்ட ஒரு சீசனில் 36 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். தொடர்ந்து பல பருவங்களாக கோல் மழை பொழிந்த அவர், 2025-26-ம் ஆண்டிலும் 48 போட்டிகளில் 35 கோல்கள் மற்றும் 8 அசிஸ்ட்களுடன் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தார். மூன்றாவது முறையாக பிரீமியர் லீக் கோல்டன் பூட்டை கைப்பற்றிய அவர், உலகின் சிறந்த ஸ்ட்ரைக்கர் என்ற விவாதத்தில் தன்னை நிலைநிறுத்தியும் கொண்டார்.

2026-ல் நார்வே…

1998-க்குப் பிறகு உலகக் கோப்பை மேடையில் தோன்றாத நார்வே, 2026 உலகக் கோப்பையில் புதிய வரலாறு எழுதத் தொடங்கியது. ஜூன் 16-ஆம் தேதி ஈராக் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து தனது முதல் உலகக் கோப்பைப் போட்டியிலேயே முத்திரை பதித்தார் ஹாலண்ட்.

ஆறு நாட்கள் கழித்து செனகலுக்கு எதிராக மீண்டும் இரண்டு கோல்கள். ஒரு சக்திவாய்ந்த ஹெடர், ஒரு துல்லியமான டேப் இன், நார்வே நாக்-அவுட் சுற்றை நோக்கி முன்னேறியது. பிரான்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட அவர், நாக்-அவுட் சுற்றில் புத்துணர்ச்சியுடன் திரும்பினார். ஐவரி கோஸ்டுக்கு எதிராக முக்கிய கோலும் அடித்தார். பின்னர் வந்தது உலகக் கோப்பையின் மிகப் பெரிய அதிர்ச்சி.

பிரேசிலை வீழ்த்திய இரவு...

ஜூலை 5, 2026 அன்று நியூயார்க்கின், நியூஜெர்சியில் நடைபெற்ற போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசிலின் வெற்றியை கால்பந்து உலகம் எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால், அந்த இரவு ஹாலண்ட் வேறு திட்டம் வைத்திருந்தார். நார்வே 2-1 என்ற கணக்கில் வெற்றியை தன்வசப்படுத்தியது. அந்த இரண்டு கோல்களையும் அடித்தவர் ஹாலண்ட்.

குறிப்பாக அவரது இரண்டாவது கோல், போட்டியின் சிறந்த கோல்களில் ஒன்றாகப் பேசப்பட்டது. பிரேசில் போன்ற அணியை உலகக் கோப்பை நாக்-அவுட்டில் வெளியேற்றியது, நார்வே கால்பந்து வரலாற்றில் மிகப் பெரிய தருணங்களில் ஒன்றாக மாறியது. அந்த இரவு முடிந்தபோது, வென்றது நார்வே மட்டுமல்ல; உலகக் கால்பந்து தனது புதிய ‘நம்பர் 9’ ஆன ஹாலண்ட் யார் என்பதையும் உறுதிப்படுத்தியிருந்தது.

தொடங்கிய புதிய வரலாறு

காலிறுதியில் இங்கிலாந்து உடனான போட்டி, மியாமியின் கடுமையான வெப்பம், தொடர்ச்சியான போட்டிகளினால் சோர்வு, எல்லாவற்றையும் மீறி போராடிய ஹாலண்ட், கூடுதல் நேரத்தின் போது முழு உடல் சக்தியையும் இழந்த நிலையில் மாற்றப்பட்டார். இறுதியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

போட்டி முடிந்ததும், கண்ணீருடன் நார்வே ரசிகர்களை நோக்கி கைதட்டிய ஹாலண்டின் காட்சி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. அது ஒரு தோல்வியின் கண்ணீராக தோன்றவில்லை, மாறாக மீண்டும் வருவேன், மீண்டு வருவேன் என்ற வாக்குறுதியின் கண்ணீராகவே அந்நிகழ்வு தோன்றியது. இந்த உலகக் கோப்பையில் 7 கோல்கள் அடித்த அவர், ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்த நார்வே வீரர் என்ற புதிய வரலாற்றையும் படைத்தார்.

ஒரு கோல் மெஷினின் ரகசியம்

ஹாலண்டின் வெற்றிக்கு பின்னால் திறமை மட்டுமில்லை, அசாதாரண ஒழுக்கமும் இருக்கிறது. மணிக்கு 36 கிலோமீட்டர் வேகத்தை தக்க வைத்துக்கொள்ள, எதிர்ப்பு எடையுடன் ஸ்பிரிண்ட் பயிற்சிகளை மேற்கொள்கிறார், தினமும் 9 முதல் 10 மணி நேரம் வரை உறங்குவதை ஒரு தொழில்முறை கடமையாகவே பார்க்கிறார்.

தூங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பே ப்ளூ லைட்டை (Blue Light) தவிர்க்க ஆம்பர் கிளாஸ்ஸஸ் (Amber Glasses) அணிவது, காலை எழுந்தவுடன் சூரிய ஒளியில் சில நிமிடங்கள் செலவிடுவது போன்ற பழக்கங்களையும், 6 அடி 5 அங்குல உயரம் கொண்ட தனது உடலை பராமரிக்க, தினமும் சுமார் 6,000 கலோரிகள் கொண்ட உணவுப் பழக்கத்தையும் பின்பற்றுகிறார். திறமையை விட ஒழுக்கம் பெரியது என்பதை நிரூபிக்கும் இந்த வாழ்க்கை முறையே, ஹாலண்டை ஆண்டுக்கு ஆண்டு இன்னும் அபாயகரமான ஸ்ட்ரைக்கராக மாற்றிக் கொண்டிருக்கிறது.

பெப் குவார்டியோலா ஒருமுறை கூறும்போது, “அவர் மனிதர் தான். ஆனால் அவரது மனநிலை மெஸ்ஸி, ரொனால்டோ போன்றது” என்றார். கெவின் டி ப்ரூய்னின் வார்த்தைகள் இன்னும் சுவாரஸ்யமானவை. “நான் பந்தை அவர் காலுக்கு அனுப்புவதில்லை. அவர் ஓடப்போகும் இடத்திற்குத்தான் அனுப்புவேன்” என்றார்.

36 பிரீமியர் லீக் கோல்கள், நார்வே அணிக்காக 62 சர்வதேச கோல்கள், சாம்பியன்ஸ் லீக்கில் அதிவேக சாதனைகள், ஒரே உலகக் கோப்பை தொடரில் 7 கோல்கள்... இவை அனைத்தும் எண்கள் மட்டுமே. ஆனால், எண்களால் அளவிட முடியாத ஒன்று ஹாலண்ட் ஏற்படுத்திய தாக்கம்.

1998-க்குப் பிறகு உலகக் கோப்பையை கனவாக மட்டுமே பார்த்த ஒரு நாட்டுக்கு, ‘மீண்டும் நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கையை விதைத்ததே அவரது மிகப் பெரிய சாதனை.

பாலன் டி'ஓர் வெல்வாரா, இன்னும் எத்தனை சாதனைகள் படைப்பார் என்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்லும். ஆனால், கோப்பைகள் காலத்தோடு மங்கலாம்; சாதனைகள் ஒருநாள் முறியடிக்கப்படலாம். ஒரு தலைமுறையின் நம்பிக்கையாக மாறிய கதைகள் மட்டும் காலத்தைக் கடந்து வாழும். அப்படிப்பட்ட கதையை எழுதிய வீரராக, நார்வேயின் ‘வைக்கிங்’ எர்லிங் ஹாலண்ட் ஏற்கெனவே உலகக் கால்பந்து வரலாற்றில் தனது பெயரை அழியாத எழுத்துகளில் பதித்துவிட்டார்.

Get More Updates

To learn more about the latest developments in Basketball, stay updated with our exclusive reports and analyses on AiLensNews.

Related News