சப்ரினா பாஸ்டர்ஸ்கி, 14 வயதில் விமானம் கட்டியவர், தற்போது ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என புகழப்படுகிறார். அவரது ஆய்வுகள் இயற்பியலின் அடிப்படைகளை மாற்றும் திறனை கொண்டவை.
சென்னை, இந்தியா 13 ஜூலை, 2026 ALN: நவீன அறிவியல் உலகமும், இயற்பியல் துறையும் இன்று இவரின் பெயரை உச்சரிக்காத நாட்களே இல்லை. ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என்று ஹார்வார்ட் பல்கலைக்கழகமே கொண்டாடும் பெண்ணாக சப்ரினா கோன்சலேஸ் பாஸ்டர்ஸ்கி உருவெடுத்துள்ளார்.
14 வயதில் தனக்கான விமானத்தை தானே தயாரித்து, அதில் பறந்து காண்பித்தவர். இயற்பியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங்கால் புகழப்பட்டவர். நாசா, ப்ளூ ஆரிஜின், மெட்டா, கூகுளில் இருந்து கோடிக்கணக்கான சம்பளத்தில் வந்த வேலையை உதறிவிட்டு இயற்பியலில் விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் தேடும் ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்தான் இந்தப் பெண்.
இயற்பியல் துறையில் ஐன்ஸ்டீன் விட்டுச் சென்ற ஏராளமான பணிகளை தொடரும் முனைப்பில் சப்ரினா ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, கருந்துளை கோட்பாடு, ஈர்ப்பு விசை, குவாண்டம் மெக்கானிஸ் பிரிவிலும், இவற்றுக்கு இடையிலான தொடர்பு குறித்தும் சப்ரினாவின் ஆய்வு, அறிவியல் உலகை வியக்க வைத்திருக்கிறது.
12 வயதில் சொந்த விமானம்...
சிக்காகோவின் இல்லிநாய்ஸ் நகரில் 1993 ஜூன் 3-ம் தேதி பிறந்தவர் சப்ரினா கோன்சலேஸ் பாஸ்டர்ஸ்கி. இவரின் தந்தை மார்க் பாஸ்டர்ஸ்கி, தாய் மரியா கோன்சலேஸ் இருவருமே வழக்கறிஞர்கள். தந்தை போலந்தை பூர்விகமாகக் கொண்டவர், தாய் கியூபாவை பூர்விமாகக் கொண்டவர். சப்ரினா சிறுவயதில் இருந்தே தன் வயதை ஒத்த குழந்தைகள் போல் இல்லை. மாறாக, உயர் சிந்தனை, ஆய்வு என்றே இருந்தார். சிறுவயதிலேயே தனக்கென விமானத்தை உருவாக்க சப்ரினா விரும்பினார்.
சப்ரினாவின் 12-வது பிறந்தநாளுக்கு அவரின் தாத்தா, ஒற்றை எஞ்சின், ஒருவர் மட்டும் பயணிக்கும் ‘செசனா 150’ சிறிய விமானத்தை பரிசாக அளித்தார். அதிலிருந்து தனக்கான விமானத்தை கட்டமைக்கும் பணியில் சப்ரினா இறங்கினார். தனது தந்தையின் ஆலோசனை, உதவியுடன், ‘ஜெனித் சிஹெச் 601எக்ஸ்’ (601 XL kit aircraft ) என்ற விமானத்தை வாங்கி, அதில் பல மாற்றங்களைச் செய்து, தனக்கு ஏற்றார்போல் உருவாக்கி, அதற்குத் தகுதிச் சான்றிதழும் பெற்றார். 2 ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சிக்குப் பின், தனது 14வயதில் தேர்ந்த விமானியின் உதவியுடன் சப்ரினா வானில் பறந்து பிரமிக்க வைத்தார்.
சீட் தர மறுத்த எம்ஐடி
பள்ளிப் படிப்பை முடித்தபின், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் (MIT) சேர 2010-ம் ஆண்டு சப்ரினா விண்ணப்பித்தார். இவரின் விண்ணப்பத்தைப் பார்த்த எம்ஐடி அதிகாரிகள், ‘தனித் திறமையாளருக்குத்தான் இங்கு இடம், உன்னைப் போன்ற சாதாரண மாணவிக்கு இடமில்லை’ எனக் கூறி நிராகரித்தனர்.
அதுவரை பேசாமல் இருந்த சப்ரினா, தான் உருவாக்கிய விமானம் குறித்த வீடியோ, தனக்கு கிடைத்த பாராட்டுகள் குறித்து எம்ஐடி கல்வி நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தார். இதைப் பார்த்து பிரமித்த எம்ஐடி அதிகாரிகள், சப்ரினாவை தொலைப்பேசியில் அழைத்து கேட்ட முதல் கேள்வி, “அடுத்த செமஸ்டரில் எப்போது சேர்கிறீர்கள்?”
எம்ஐடியில் சேர்ந்து இளநிலை இயற்பியல் பட்டப் படிப்பு முடித்த சப்ரினா, எம்ஐடி நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளில் எந்த மாணவியும் எடுக்காத மதிப்பெண்களுடன் 5.0 கிரேடு தரத்தில் படிப்பை முடித்தார்.
ஹார்வார்டில் முனைவர் பட்டம்
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சப்ரினா தனது கோட்பாடு இயற்பியல் (Theoretical Physics) குறித்த முனைவர் படிப்பில் சேர்ந்து, வல்லுநர்கள் ஆன்ட்ரூ ஸ்டார்மிங்கர், அலெக்சாண்டர் ஜிபோதேவ் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார். முனைவர் படிப்புதான் சப்ரினா வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. ‘ஸ்பின் மெமரி எஃபெக்ட்’ குறித்த சப்ரினாவின் ஆராய்ச்சி, ஈர்ப்பு விசை அலைகள், விண்வெளி நேரத்தின் கட்டமைப்பு குறித்த ஆய்வுக்கு முன்னெடுப்பாக அமைந்தது. 2019-ம் ஆண்டு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பை சப்ரினா முடித்தார்.
கோடிகளில் வேலை, உதறிய சப்ரினா...
சப்ரினா முனைவர் பட்டம் பெற்றதும், அவரின் இயற்பியல் அறிவைப் பார்த்து, கோடிக்கணக்கான டாலர்களில் வேலைவாய்ப்பு வரிசையாக வந்தன. குறிப்பாக நாசா, ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஆரிஜின், மெட்டா, கூகுள், பிரவுண் பல்கலைக்கழகம் என பல முன்னணி நிறுவனங்களில் இருந்து சப்ரினாவுக்கு அழைப்பு வந்தது. ஆனால், சப்ரினா எதையும் ஏற்கவில்லை.
2021-ம் ஆண்டு கனடா சென்ற சப்ரினா, புகழ்பெற்ற பெரிமீட்டர் இன்ஸ்டியூட் ஃபார் தியரிட்டிகல் பிசிக்ஸ் நிறுவனத்தில் இளம் ஆய்வாளராக சேர்ந்தார். அங்கு குவாண்டம் இயக்கவியல், ஈர்ப்பு விசை மற்றும் விண்வெளி நேரம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவைப் புரிந்துகொள்ளும் சர்வதேச ஆராய்ச்சித் திட்டத்தில் இணைந்தார். சப்ரினாவின் இந்த ஆய்வைப் பார்த்த சைமன்ஸ் அறக்கட்டளை 2023-ம் ஆண்டில் 80 லட்சம் டாலர் மானியம் அளித்தது.
சப்ரினா தனது ஆய்வு குறித்து சமீபத்தில் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் “பிரபஞ்சத்தின் மூலக் குறியீட்டை ஆய்வு செய்கிறேன். பிரபஞ்சம் குறித்து ஐன்ஸ்டீன் விட்டுச் சென்ற அவரின் ஆய்வுகளை நான் தொடர்கிறேன். ஐன்ஸ்டீன் ஈர்ப்பு விசையை விளக்கினார். ஈர்ப்பு விசை எதனால் உருவாகிகிறது, எப்படி ஈர்க்கிறது என்ற கேள்விகளுக்கு நான் விடை தேடுகிறேன். இன்னும் 2 ஆண்டுகளில் என்ன நடக்கும் என எனக்குத் தெரியாது. இயற்பியலில் விசித்திரம் அதுதான். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை உங்களால் உறுதியாகக் கூற முடியாது. அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கும்” எனத் தெரிவித்தார்.
ஹீரோக்கள் இவர்கள்தான்...
சப்ரினாவின் வாழ்க்கையில் திருப்புமுனைக்கு காரணம், ‘ஹாரிபாட்டர்’ திரைப்படமும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸும் தான். பாப் பாடகியாக வரவேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த சப்ரினாவை, ஹாரிபாட்டர் ஒரு மந்திரக்கோலால் பறந்த காட்சி’ இயற்பியல் மீது அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது என்று சப்ரினா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அதேபோல, சப்ரினா சிறுவயதிலேயே ஜெஃப் பெஸோஸ் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். சப்ரினா தான் உருவாக்கிய விமானம் குறித்த வீடியோவை பெஸோஸுக்கு அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த பெஸோஸ், தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி பாராட்டியிருந்தார். அது மட்டுமல்லாமல் சப்ரினாவின் திறமையை புரிந்துகொண்ட பெசோஸ், படிப்பை முடித்துவிட்டு தன்னுடைய விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜினில் பணிக்கு வருமாறும் கேட்டுக்கொண்டார். சப்ரினாவையும், அவரின் பெற்றோரையும் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தங்கள் நிறுவனத்துக்கு அழைத்து, சுற்றிக் காண்பித்தது. இவை அனைத்தும் சப்ரினாவின் இயற்பியல் மீதான ஆர்வத்தைத் தூண்டின.
இயற்பியல் ஏன்?
கடந்த மே மாதம் டைம்ஸ் நாளேட்டுக்கு சப்ரினா அளித்த பேட்டியில் “பட்டப்பிடிப்பு முடித்ததும் விண்வெளிப் பொறியியல் படிக்கவே ஆர்வமாக இருந்தேன். ஆனால், விண்வெளிப் பொறியியலில் பெரும் செல்வந்தர்கள், தொழில்முனைவோர்கள், கோடிக்கணக்கில் முதலீடு செய்தை அறிந்தபின் அந்த கோடீஸ்வரர்களை மேலும் கோடீஸ்வரர்களாக மாற்ற நான் விரும்பவில்லை. இதனால்தான் நான் இயற்பியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றேன். இயற்கையில் விடை தெரியாத பல கேள்விகளுக்கு பதில் காண ஆய்வு செய்தேன்” எனத் தெரிவித்தார்.
அடுத்த ஐன்ஸ்டீன்?
ஐன்ஸ்டீனின் ‘கருந்துளைகள்’ குறித்த ஆய்வுகளை சப்ரினா தொடர்ந்து நடத்தத் தொடங்கியது, நவீன அறிவியலில் தீர்க்க முடியாத பல்வேறு சவால்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் அளிக்கக் கூடியதாகவும், ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு விசை கோட்பாட்டை குவாண்டம் இயக்கவியலுடன் ஒருங்கிணைக்க முடிந்தது.
சப்ரினாவின் இந்த ஆய்வுதான், அவரை ஐன்ஸ்டீனுடன் ஒப்பிட்டு ஹார்வார்ட் பல்கலைக்கழகம் புகழக் காரணமாக அமைந்தது. ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என புகழ்வதற்கும் ஒப்பீடு செய்வதற்கும் அவரின் பிரபலத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அல்ல. மாறாக, அவர் தீர்க்க முயலும் பிரச்சினைகளின் அளவை அடிப்படையாகக் கொண்டு புகழ்ந்தனர்.
சப்ரினாவின் ஆய்வுகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்த போதிலும்கூட தனது சாதனைகளுக்கு உலகம் அளிக்கும் பாராட்டுகள் பலவும் தகுதிக்கு மீறியவை சங்கடமாக உணர்வதாக பேட்டியில் சப்ரினா தெரிவித்திருந்தார்.
ஐன்ஸ்டீன் விட்டுச் சென்ற விடைதெரியாத, இயற்பியலின் மிக ஆழ்ந்த கேள்விகளுக்கு பதில் தேடுவதில் சப்ரினா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என்ற பட்டம் சப்ரினாவை 10 ஆண்டுகளாக பின்தொடர்ந்தாலும் கூட புகழ், பல கோடி ஊதியத்தில் வேலை கிடைத்தாலும், அனைத்தையும் உதறிவிட்டு, ஆராய்ச்சி, பிரபஞ்சத்தின் சூட்சமத்தை அறிவதில் அவரின் கவனம் உறுதியாக நிலைத்திருக்கிறது.
To learn more about the latest developments in Research & Discoveries, stay updated with our exclusive reports and analyses on AiLensNews.