பொள்ளாச்சியில் நடந்த மாநாட்டில், அண்ணாமலை 2031-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என தெரிவித்தார்.
சென்னை, இந்தியா 13 ஜூலை, 2026 ALN: பொள்ளாச்சி: ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். 2031-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என, பொள்ளாச்சியில் நடந்த மாநாட்டில் அண்ணாமலை பேசினார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. அமைப்பின் தலைமை வழிகாட்டியான அண்ணாமலை பேசியதாவது: பொள்ளாச்சி மண்ணில் பெரிய எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் எல்லோரும் நின்று கொண்டு உள்ளோம். இது ஒரு மாவட்டத்தில் ஒரு போதை ஒழிப்பு மாநாடுதான், உங்கள் நம்பிக்கையை பார்க்கும் போது எல்லா பக்கமிருந்தும் வந்திருக்கின்றனர். இங்கு இருக்கின்ற தன்னார்வலர் ஒருவரின் தந்தை தற்பொழுது தான் உயிரிழந்தார். அவர் குடிப்பழக்கத்திற்கு உள்ளானவர். அதையும் தாங்கிக்கொண்டு போதைக்கு எதிராக அந்த தன்னார்வலர் இங்கு நின்று கொண்டுள்ளார். போதைக்கு எதிராக வலுவாக உள்ளோம்.
38 நாளில் 19 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்கள், வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இந்த இயக்கம் எனது குடும்பத்திற்கு சொந்தமானது கிடையாது, உங்களுக்கானது. இந்த அமைப்பை பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர் தான். இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் 50 லட்சத்தை எட்டும் போது நிரந்தரமாக ஒரு நல்ல சமூகம் உருவாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்க 50 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளோம்.
ஆறு மாதம் இலக்கு வைத்துள்ளோம். செப்டம்பர் மாதம் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், அக்டோபர் மாதம் குழந்தைகள் நலன் என ஆறு மாதங்களில் ஆறு முக்கிய பிரச்சினைகளை எடுத்து தீர்வு காண உள்ளோம். ‘வீ த லீடர்’ அமைப்பில் 17 சதவீதம் மகளிர் இருக்கிறார்கள். இன்னும் அதிகமாக வேண்டும். 2031 ல் ஆட்சி மாற்றம் ஏற்படும், ஆறு மாதங்கள் முழுமையாக சமூக பணி செய்வோம். மக்கள் நம்மிடம் வருவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் போதைக்கு எதிரான மாதமாக கடைபிடிப்போம், புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் இடையூறு ஏற்படுத்துவது நமது நோக்கம் அல்ல, அதற்கான மாநாடு இது அல்ல. குடும்பத்தில் ஏற்படும் வன்முறை, சாலை விபத்து என எல்லா இடத்திலும் பிரச்சனைகளுக்கு காரணமாக மது இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு ஒரு கோடியே 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து ஒரு அரசை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அந்த அரசுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
புதிய அரசில் உள்ள அமைச்சர்கள் பெரும்பாலானோர் முதல் முறையாக அமைச்சரானவர்கள். அதனால் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும், தடுமாறும் போது தூக்கி விட வேண்டும் கீழே அழுத்தக்கூடாது. போதை ஒழிப்பு குறித்து ஒரு ஆண்டுக்கான வெள்ளை அறிக்கை கொடுத்துள்ளோம்.நான் இறுமாப்புடன் சொல்வேன் தேசியவாதி என்று ஜாதி மதத்தை வீட்டில் வைத்து பூட்டி விட்டு தான் வந்துள்ளேன். கரூர் இனாம் நிலம் விஷயத்தில் தவெக வுக்கு ஆதரவாக உள்ளேன் என சொல்கிறார்கள். என்னை இந்து விரோதி என்கிறார்கள்.
இதே இனாம் நிலத்தை அதில் இருப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என ஹெச்.ராஜா பேசினார், பழனிசாமி பேசினார். அவர்கள் இந்து விரோதிகள் இல்லை, ஆனால் என்னை இந்து விரோதி என்கிறார்கள் மதம் ஜாதி அடையாளத்தை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு தான் வெளியே வந்துள்ளேன். தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது இலக்கு. அதை நோக்கித்தான் உழைப்பு இருக்கும்.
‘வீ த லீடர்ஸ்’ அரசியல் கட்சியாக மாறப்போகிறது அதற்கான சரியான நேரம், தலைமை, எண்ணிக்கை வரும். கிராமந்தோறும் சென்று மக்களை சந்திக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனி நபர் மீதும் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. தவெக அரசு இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி கடன் வாங்கும், அடுத்த ஆண்டும் அதேபோல் கடன் வாங்கும். நாம் ஆட்சிக்கு வரும் போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்படும்.
உண்மையான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, விவசாயத்தில் எழுச்சி, பண்பாட்டு மீட்சி, அரசியல் புரட்சி நமது இலக்காக இருக்கும்.தமிழகத்தில் 2031-ல் ஆட்சியை பிடிப்போம். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்
போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூலை மாதம் வெள்ளை பட்டை மாதமாக கடைபிடிக்கப்படும்.
கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு குழுக்களை உருவாக்க வேண்டும்.
வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், இளைஞர்கள் காலை நேரத்தில் மதுபானம் அருந்துவதை தடுக்க கள்ளச்சந்தை மது விற்பனை, கஞ்சா ஆகியவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அனுமதி பெற்ற எப்எல் 2 மதுபானகூடங்களில் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய எப்எல் 2 மதுபான கூடத்துக்கு அனுமதி வழங்ககூடாது. போதைப்பொருள் தடுப்பு சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
To learn more about the latest developments in Political Controversies, stay updated with our exclusive reports and analyses on AiLensNews.