தவெக தேர்தல் வாக்குறுதியான பணி நிரந்தரம், சமவேலை சமஊதியம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

ALN NEWS DESK
ALN NEWS DESK
Updated : Jul 18, 2026, 05:52 PM IST
5 min read
  • linkedin
  • twitter
  • facebook
  • instagram
  • whatsapp

சென்னை, தவெக தேர்தல் வாக்குறுதியான பணி நிரந்தரம், சமவேலை சமஊதியம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை,

தவெக தேர்தல் வாக்குறுதியான பணி நிரந்தரம், சமவேலை சமஊதியம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதிய நியமனங்களுக்கு முன்பாக தற்காலிகமாக 16 ஆண்டுகளாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை பாடங்களில் பணிபுரிகின்ற 11,773 பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தி அறிக்கை :

5 ஆயிரம் ரூபாய் சம்பளம்

அதிமுக ஆட்சியில் 2011-2012 ஆம் கல்விஆண்டில் அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களில் நியமித்து, ஆரம்ப சம்பளமாக ஐந்து ஆயிரம் ரூபாய் சம்பளம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.

திமுக வாக்குறுதி

இதனை அடுத்து அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் சம்பளத்தை மட்டுமே படிப்படியாக உயர்த்தி கடைசியாக பத்தாயிரம் ரூபாயாக சம்பளம் வழங்கப்பட்டது. இதை அடுத்து 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது.

பணி நிரந்தரம்

ஆனால் திமுக ஆட்சியிலும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உதவி தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் மற்றும் உதவித்தொகை ஐந்தாயிரம் ரூபாய் என இரண்டு தவணையில் பதினைந்தாயிரம் கிடைக்கிறது.

முரண்பாடு நிலை

2026 ஆம் ஆண்டின் மே மாதத்திற்கு சிறப்பு உதவித்தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனால் மே மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் மற்ற மாதங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் என சம்பளத்திலும் முரண்பாடு நிலை ஏற்பட்டுள்ளது.

வாழ்வாதாரம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, மருத்துவ விடுப்பு, போனஸ், பண்டிகை கால முன்பணம், இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் குடும்ப நல நிதி, ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம், பணிக்கொடை போன்ற பண பலன்களும், அரசு சலுகைகளும் இல்லாமல் இந்த 16 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிவதால் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகிவிட்டது. வேலைக்கு சேர்ந்ததில் இருந்து இதுநாள்வரை மரணம், வயது மூப்பால் பணி ஓய்வு, ராஜினாமா என சுமார் 5 ஆயிரம் பேர் பணியிடங்கள் காலியிடமாகிவிட்டது.

காலமுறை சம்பளம்

இதன் காரணமாக தற்போது சுமார் 12 ஆயிரம் (11,773) ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற ஆசிரியர்களை அவர்கள் கற்பிக்கின்ற பாடங்களில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை கணினிஅறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி ஆகியவற்றில் காலமுறை சம்பளத்தில் நிரந்தரமாக்க வேண்டும்.

சம வேலை சம ஊதியம்

மேற்கண்ட பாடங்களில் சிறப்பாசிரியர்களாக காலமுறை சம்பளத்தில் நியமித்தவர்களுக்கு தற்போது கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை சம்பளம் கிடைக்கிறது. எனவே ஒரே கல்வித்தகுதி மற்றும் ஒரே பாடங்களில் பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் தொகுப்பூதியம், ஆனால் சிறப்பாசிரியர்களுக்கு மட்டும் ஒரு லட்சம் சம்பளம் என்ற ஏற்றத்தாழ்வை, பாகுபாட்டை மாற்றி, சம வேலை சம ஊதியம் வழங்க வேண்டும்.

பணி நிரந்தரம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தை (TRB) தற்போது உடற்கல்வி பாடத்திற்கு 1328 காலிப்பணி இடங்களுக்கு தேர்வு என அறிவித்துள்ளது. எனவே இதற்கு முன்பாக 16 ஆண்டுகளாக தற்காலிகமாகப் பணிபுரிகின்ற 3843 உடற்கல்வி பாட பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கடந்த ஆட்சியாளர்கள் புறக்கணிப்பு

இதே போல் ஓவியம் (3721), கணினிஅறிவியல்(2033), தையல்(1584), இசை(329), தோட்டக்கலை(22), கட்டிடக்கலை(49), வாழ்க்கைக்கல்வி(192) பாடங்களில் தற்காலிகமாக 16 ஆண்டுகளாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்கிய பிறகே காலிப்பணி இடங்களை நியமிக்க வேண்டும். இதனை கடந்த ஆட்சியாளர்கள் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினிஅறிவியல் பாடங்களில் காலிப்பணி இடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நிரப்பாமல் புறக்கணித்து விட்டார்கள்.

திமுக ஆட்சி

திமுக ஆட்சியில் காலிப்பணி இடங்களுக்கு தேர்வு நடந்தால் அதில் 5 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் சிறப்பு மதிப்பெண் 15 வழங்கப்படும் என உடற்கல்வி, ஓவியம், தையல், இசை பாடங்களுக்கு மட்டுமே அறிவித்து, மற்ற பாடங்கள் கணினிஅறிவியல், தோட்டக்கலை கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி போன்றவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பகுதிநேர ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு நிற்கின்றார்கள்.

தேர்தல் வாக்குறுதி

தவெக ஆட்சியில் தற்காலிகமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்த ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என தேர்தலில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே புதிய காலிப்பணி இடங்களுக்கு தேர்வு நடத்துவதற்கு முன்பாக, 16 ஆண்டுகளாக தற்காலிகமாக உடற்கல்வி, ஓவியம், கணினிஅறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி பாடங்களில் பணிபுரிகின்ற 11,773 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அரசு கொள்கை முடிவு

இதற்காக ஏழாவது ஊதிய குழு நிர்ணயம் செய்த நிலை 10-ன்படி ரூ. 20,600 என்ற அடிப்படை சம்பளத்துடன் காலமுறை சம்பளம் வழங்க ஒரு மாதத்திற்கு 20 கோடி என ஆண்டுக்கு 240 கோடி கூடுதலாக ஆகும். இதனை 50 லட்சம் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்காகவும் மற்றும் 11,773 ஆசிரியர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்படவும், ஆசிரியர்களின் 16 ஆண்டு தற்காலிக வேலையை நிரந்தரமாக்கவும், ஆசிரியர்கள் பணி நிரந்தரம் என்ற தவெக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவும் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்.

கோரிக்கை

தவெக தேர்தல் வாக்குறுதியாக இருப்பதால் கோப்பு உருவாக்கி முதல்வர் விஜய் கையொப்பமிட்டால் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும். முதல்-அமைச்சர் விஜய் கையிலும், கையொப்பத்திலும் பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்காலம் உள்ளது. பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டிய கோரிக்கை என்பது தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய முடிவு ஆகும்.

அரசாணை

தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணி செய்து வருகிறார்கள். அதனால் கோரிக்கையை முதல்-அமைச்சர், பள்ளிக்கல்வி, விளையாட்டு, நிதித்துறை, தலைமைச்செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வலியுறுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கம் ஒரு அரசாணை போட்டு செயல்படுத்த வேண்டிய விஷயம் இது.

சரியான நடைமுறை இல்லை

ஆனால் பல மாவட்டங்களை சேர்ந்த 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு அனுப்புகின்ற கோரிக்கையை ஏதோ ஒரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பி அதை தள்ளுபடி செய்து நிராகரிப்பது சரியான நடைமுறை இல்லை.

நடவடிக்கை

எனவே தவெக தேர்தல் வாக்குறுதிபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் மாநில முதல்-அமைச்சருக்கு அனுப்புகின்ற கோரிக்கையை முதல்-அமைச்சரின் நேரடி பார்வைக்கு அனுப்பி அதை முதல்-அமைச்சர் பதில் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்கள் 50 சதவீதம்

பகுதிநேர ஆசிரியர்கள் எப்போது பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதைக்கூட தெரிந்து கொள்ள முடியாமல் இன்றளவும் பரிதவித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலும் ஏழை எளிய விவசாய தினக்கூலி குடும்பத்தில் இருக்கின்றவர்கள், பெண்கள் 50 சதவீதம் இருக்கிறார்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் என கஷ்டப்படுகின்றார்கள். பலர் ஐம்பது வயதை கடந்து விட்டார்கள். ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

மனக்குமுறல்

எவ்வித அரசு சலுகைகள் இல்லாமல், இந்த 15 ஆயிரம் ரூபாய் குறைவான சம்பளத்தை வைத்து இன்றைய விலைவாசி உயர்வில் எஞ்சிய காலத்தை குடும்பங்களை எப்படி நடத்துவது என மனக்குமுறல் மற்றும் மன உளைச்சலில் சிக்கி தவிக்கின்ற தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 11,773 பகுதிநேர ஆசிரியர்களை காப்பாற்ற முதல்-அமைச்சர் விஜய் ஒரே கையெழுத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கூடுதல் பணி

6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடங்கள் நடத்த பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் அனைத்து வகுப்புகளுக்கும் சென்று கற்றல் கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மற்ற வகுப்பு பாட ஆசிரியர்கள் வருகை புரியாத போதும் மேலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள போதும் அந்த வகுப்புகளை கூடுதல் பணியாக பகுதிநேர ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அலுவலகப் பணி உள்பட பள்ளியின் அனைத்துவகை பணியிலும் இன்றளவும் பகுதிநேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இதற்காக கூடுதலாக ஊதியம் எதுவும் வழங்க வில்லை.

பயணப்படிகூட கிடைப்பது இல்லை

பகுதிநேர ஆசிரியர்களுக்கு அரை நாள் மட்டுமே வேலை என்றாலும் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைக்கழக போட்டிகள் நடைபெறும்போது மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அழைத்து கொண்டு போட்டிகளில் பங்கேற்க வைத்து பெற்றோர்களிடம் ஒப்படைப்பதுவரை அற்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்கள்.இதற்கு எல்லாம் போக்குவரத்து பயணப்படிகூட பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடைப்பது இல்லை.

பணி நிரந்தரம்

தேர்வுப் பணி, தேர்தல் பணி போன்றவற்றிற்க்கும் பகுதிநேர ஆசிரியர்கள் பகுதிநேரம் என்பதையும் கடந்து நாள் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். என்றாவது ஒருநாள் அரசுப் பணிக்கு ஈர்க்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் கூடுதல் உழைப்பை செலுத்தி வருகின்ற பகுதிநேர ஆசிரியர்களை அங்கீகரித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get More Updates

To learn more about the latest developments in Education News, stay updated with our exclusive reports and analyses on AiLensNews.

Related News