எம்.எஸ். விஸ்வநாதனின் 11வது நினைவு நாளில், அவர் மற்றும் கண்ணதாசனின் இசை கூட்டணியின் மறக்க முடியாத பாடல்களைப் பற்றி பேசுகிறோம்.
நியூ டெல்ஹி, இந்தியா 14 ஜூலை, 2026 ALN: தனது 4வது வயதில் தந்தையை இழந்து, தியேட்டர்களில் நொறுக்குதீனி விற்று, பலரிடம் கஷ்டப்பட்டு இசை கற்று, சென்னை வந்து போராடி சினிமா கம்பெனிகளில் வேலை பார்த்து, இசைக்குழுவில் ஆர்மோனியக் கலைஞராக பணியாற்றி பின்னர் இசையமைப்பாளர் ஆனவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து சாதனை உள்ளார். இன்று அவரது 11வது நினைவு நாள். அவர் குறித்து அவருடன் பழகியவர்கள், திரையுலகப்பிரபலங்களுடன் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
எம்.எஸ்..விஸ்வநாதன் கடைசிகாலங்களில் அவருடன் அதிகம் இருந்தவர் நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர் ஆதவன். இவர் தனியார் டிவியில் எம்.எஸ்.வியை வைத்து என்றென்றும் எம்எஸ்வி என்ற நிகழ்ச்சியை நடத்தினார். தனது அனுபவத்தை, சொல்லாத விஷயத்தை அதில் சொன்னார் எம்.எஸ்.வி. நிறைய பாடல்களையும் பாடினார்.
''எம்.எஸ்.விஸ்வநாதனின் கடைசி 5 ஆண்டுகள் அவருடன் அதிகமாக பழகிய, அவருடன் இருந்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமை. அவரின் கடைசி 5 ஆண்டு பிறந்தநாளில் நான் பங்கு பெற்றேன். அவரின் பிறந்தநாளுக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்தது. அவரே குறைத்துக்கொண்டே வந்தார். இறப்பதற்கு முந்தைய பிறந்தநாளில் என்னை மட்டும் அழைத்து, வீட்டில் விருந்து கொடுத்தார். மிகச்சிறந்த அறிவாளி வாய்திறந்து பேசமாட்டார். தன்னை புகழ்ந்துகொள்ளமாட்டார்'' என்கிறார் ஆதவன்.
''அவரின் சின்ன, சின்ன விஷயங்களை கூட நான் ரசித்து இருக்கிறேன். அவரை மதித்து நிகழ்ச்சிகளில், விழாக்களில் சால்வை அணிவிப்பார்கள். பெரும்பாலானவர்கள் அதை பக்கத்தில் உள்ளவர்களிடம் கொடுப்பார்கள் அல்லது கையில் வைத்துக்கொள்வார்கள். ஆனால், எம்எஸ்வி தன்னை மதித்தவர்களுக்கு மரியாதை கொடுப்பார். அந்த சால்வையை தனது இடுப்பில் கட்டிக்கொள்வார்.
எல்லா விஷயங்களையும் அவர் குழப்பிக்கொள்ளமாட்டார். தனது துறையில் உழைப்பை கொட்டுவார். அந்தவகையில் சிறந்த ஞானி. பல ஆண்டுகள் சினிமாவில் கொடி பறந்தாலும் எந்த புகாரிலும், சர்ச்சையில் சிக்காதவர். அதேசமயம் பாடல் பதிவில், தனது வேலைகளில் கடும் உழைப்பாளி, கடும் கோபக்காரர். ஆனால் அந்த வேலை முடிந்தவுடன் நண்பராக, குழந்தையாக மாறிவிடுவார்.
அவருக்கு கடவுள் பக்தி அதிகம். தினமும் கடவுளை அழைக்காமல் இருக்கமாட்டார். அதேபோல் அவர் வாயில் அடிக்கடி வரும் வார்த்தை முருகா. அவரை அந்த காலத்து ஆள் என்று சிலர் நினைத்துக்கொண்டிருந்தார்கள். அவர் அப்டேட்டில் இருந்தார். அனைத்து இசையையும் கேட்டார், புது இசையமைப்பாளர்களை பாராட்டினார். புது பாடல்களை ரசித்தார்.
என் நிகழ்ச்சியில் மற்ற இசையமைப்பாளர் பற்றி கேட்கலாமா? பேசலாமா என்று தயங்கினேன். அனைத்து நல்ல பாடல்களும் தன் பாடல்கள் மாதிரி என்று சொல்லிவிட்டு, தில்லானா மோகனம்பாளில் கே.வி.மகாதேவன் இசையை மனம் திறந்து பாராட்டினார். இளையராஜா பற்றி கேட்டபோது ஜனனி ஜனனி பாடலை பாடியே காண்பித்தார்'' என்கிறார் ஆதவன்.
எம்.எஸ்.வி.குறித்து அவருடன் பல படங்களில், பாடல்களில் பணியாற்றிய பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பிபிசி தமிழிடம், '’அவரை பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம், பாடிக்கொண்டே இருக்கலாம். அவர் இசையும், பாடல்களும் ஒலிக்காத இடங்கள் இல்லை. இனியும் அப்படிதான். எம்.எஸ்.வியிடம் உள்ள நல்ல குணம் எது என்று கேட்கிறார்கள். அவரே ஒரு நல்லகுணம்தான்’’' என்கிறார்.
எம்.எஸ்.விஸ்வநாதனையும், கண்ணதாசனையும் பிரிக்கவே முடியாது. கண்ணதாசன் மீது அவ்வளவு மரியாதை, பாசம் வைத்திருந்தார் எம்.எஸ்.வி.
கண்ணதாசன் மகன் அண்ணாதுரை கண்ணதாசனிடம் எம்.எஸ்.வி இசையில் உங்களுக்கு பிடித்த பாடலை சொல்ல முடியுமா என்று பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.
’’அப்பா, எம்.எஸ்.வி.கூட்டணியில் வந்த எனக்கு பிடித்த தத்துவப் பாடல்களை சொல்கிறேன். நூற்றுக்கணக்கான தத்துவப்பாடல்களை அவர் தந்திருந்தாலும் நூல்வேலி படத்தில் வரும் ’மெளனத்தில் விளையாடும் மனசாட்சியே’ பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதில் பாலமுரளிகிருஷ்ணாவை பாட வைத்தது அருமை.
கவலையில்லாத மனிதன் படத்தில் வரும் 'பிறக்கும்போதும் அழுகின்றாய் ' பாடல் பிடிக்கும். அதில் சந்திரபாபு, ’இயற்கை அழுதால் உலகம் செழிக்கும். மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்’ என்று பாடுவது அழகான தத்துவ வரிகள். அவள் ஒரு தொடர்கதை படத்தில் வரும் ’தெய்வம் தந்த வீடு’ பாடலை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? ஒரு ஆண் அந்த பாடலை பாடினாலும் பெண்ணின் மனநிலை, குடும்ப சூழ்நிலை, கவலைகள் என பல விஷயங்கள் அந்த பாடல் சொல்லாமல் சொல்லும். சுமைதாங்கி படத்தில் வரும் ’மயக்கமா கலக்கமா?’ ஒருவித சோகத்தையும், ஒருவித வலியையும் சொன்னாலும் ஒரு வித தெளிவை சொல்லும். அந்த பாடல் கேட்டால் நமக்குள் ஒருவித உற்சாகம், நம்பிக்கை பிறக்கும்.
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்பதெல்லாம் எப்பேற்பட்ட வரிகள், அதை சரியான இசையோடு கொடுத்து, நம்மை சிந்திக்க வைத்து இருப்பார் எம்.எஸ்.வி'' என்கிறார் அண்ணாதுரை கண்ணதாசன்.
எம்எஸ்வியுடன் இணைந்து பயணித்தவர் டி.கே.ராமமூர்த்தி. இருவரும் இணைந்துதான் இசைப்பயணத்தை தொடங்கினார்கள். நூற்றுக்கணக்கான வெற்றி பாடல்களை கொடுத்தனர். டி.கே.ராமமூர்த்தி மகள் ஜமுனா சிவசங்கரனிடம் பிபிசி சார்பில் பேசினோம்.
இந்த கூட்டணியில் உங்களுக்கு பிடித்த பாடல்களைச் சொல்ல முடியுமா என்று கேட்டபோது, ''அப்பா டிகேஆர், எம்எஸ்வி கூட்டணி என்பது கடவுள் அளித்த இசைக்கூட்டணி என்பார்கள். அவர்கள் இடையே நட்பை மீறிய ஒரு உறவு இருந்தது. அப்பாவை பார்க்க வரும்போது அவர் காலில் விழுந்து ஆசி பெறுவார் எம்.எஸ்.வி. அவர்கள் சில ஆண்டுகள் பிரிந்தார்கள். அந்த காலத்தில் இருவருக்கும் இடையே நட்பு, மரியாதை மட்டும் கூடவே இருந்தது.
அந்த கூட்டணியில் உருவான பாடல்களில்,
1) காலங்களில் அவள் வசந்தம் (பாவமன்னிப்பு)
2) நாளாம் நாளாம் திருநாளாம் (காதலிக்க நேரமில்லை)
3) கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? (ஆலையமணி)
4) தங்கரதம் வந்தது வீதியிலே(கலைக்கோயில்)
5) சொன்னது நீதானா '(நெஞ்சில் ஓர் ஆலயம்)
6) இரவுநிலவும்(கர்ணன்) என்ற பாடல்கள் பிடிக்கும்' என்றார் ஜமுனா.
பாடகர் வேல்முருகன் எம்.எஸ்.வி குறித்து பிபிசி தமிழிடம், ''என் சொந்த ஊரான விருத்தாசலத்தில் அவர் கச்சேரி கேட்டு இருக்கிறேன். சென்னையில் இசைக்கல்லூரி மாணவனாக இருந்தபோது காமராஜர் அரங்கில் நடக்கும் அவர் கச்சேரிகளுக்கு போவேன். ஒருமுறை பல மணி நேரம் காத்திருந்து, பலர் சிபாரிசில் அவருடன் போட்டோ எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னை பற்றி சொன்னதும், அந்த மேதை அப்படியா என காது கொடுத்து கேட்டார். நல்லா வரணும் என ஆசீர்வாதம் செய்தார்.
என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள் அது. அடுத்து பாடகர் ஆனதும், அவர் முன்னால் அவர் பாடல்களை பாடியிருக்கிறேன். அப்போது பலமுறை ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறேன். ஒருமுறை கூட அவர் பந்தா பண்ணியது இல்லை. எல்லாம் அவன் செயல், எல்லாம் முருகன் அருள் என்பார். பாகுபாடு பார்க்காமல் எல்லாரிடம் கனிவாக பேசுவார்.
புதுமுகங்களை, இசைக்கலைஞர்களை பாராட்டுவார். அவரிடம் நான் பார்த்து வியந்தது எளிமை, பக்தி, அப்புறம் தொழில் மீது ஆர்வம். அவர் கோபக்காரர் என கேள்விப்பட்டு இருக்கிறேன். அது பாடல் பதிவின்போது, பின்னணி இசை பதிவின்போது மட்டுமே. மற்ற நேரங்களில் அவர் அவ்வளவு எளிமையானவர் என்று அவருடன் இருப்பவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அவர் பாடல்களில் எனக்கு பக்திபாடல் ரொம்ப இஷ்டம். அவர் பாடல்கள் இன்னும் தலைமுறை தாண்டி நிற்கும். அவர் இறைவனின் நேரடி ஆசி பெற்றவர் என்பார்கள். அது உண்மை. முருகனை, கண்ணனை, அம்மனை பற்றியெல்லாம் அவர் பாடிய பாடல்கள் ஒன்றா, இரண்டா?. இசை மீது பக்தி இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட ட்யூன் வந்துவிழும். தனது இசைக்காகவே வாழ்ந்தார். அதனால், இசையும் அவருடனே வாழ்ந்தது.'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To learn more about the latest developments in Music, stay updated with our exclusive reports and analyses on AiLensNews.